

சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு குறைந்துள்ளதால், உள்ளூரில் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 336 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. கடையடைப்பு போராட்டம் நடந்ததால், தங்கம் விலை குறைந் திருந்தும் மக்கள் வாங்க முடியாத சூழல் உள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் முதலீட்டில் மாற்றம், பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பின்னர், ஜனவரி மாதத்துக்குப் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது நேற்று குறைந்தது. உள்ளூரில் தங்கத்தின் தேவையும் திடீரென குறைந்துள்ள தால் பவுனுக்கு ரூ.2,336 குறைந்தது. இதனால், சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 505-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 797 ஆக இருந்தது.
தமிழகத்தில் 35 ஆயிரம் கடைகள்
நாடு முழுவதும் நகைக்கடை உரிமை யாளர்கள் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் 2 லட்சம் கடைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. தமிழகத்தில் 35 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால், தங்கம் விலை பெரிய அளவில் குறைந்திருந்தாலும், நகை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இது பொதுமக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘கடந்த ஒரு வருடத்துக்கு பிறகு பெரிய அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் விலை குறைவு, உள்ளூர் தேவை குறைவுதான் முக்கிய காரணம். ஆனால், இது நிரந்தரம் இல்லை’’ என்றார்.