Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM

9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடக்கம்: 11 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்

சென்னை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாளஅட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 39 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் தற்செயல் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 5 முதல் 6 மணிவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 17,130 காவல் துறையினர், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வங்கிகளுக்கு விடுமுறை

வங்கி ஊழியர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு வசதியாக, தேர்தல் தினத்தன்று அந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின்போது, மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டுகள் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காட்டி வாக்களிக்கலாம். இவை இரண்டும் இல்லாதவர்கள், மாநில தேர்தல்ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களான ஆதார் அட்டை, 100 நாள் வேலைஉறுதி திட்டப் பணி அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை (PAN Card), தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு (Indian Passport), புகைப்படத்துடன் கூடியஓய்வூதிய ஆவணம், மத்திய,மாநில அரசு, அரசு பொதுத்துறைநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை,எம்.பி., எம்எல்ஏக்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x