

சேலம் கொங்கணாபுரம் அடுத்த கச்சுபள்ளி குட்டைக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (44). லாரி ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா (28). இவர்களது மகன்கள் செந்தமிழ் (18), வண்ணத்தமிழ் (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த வண்ணத்தமிழ் கடந்த பல மாதங்களுக்கு முன்பு சைக்கிள் ஓட்ட பழகியபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், காயம் ஏற்பட்ட பகுதியில் புற்றுக்கட்டி உருவானதை அடுத்து, இதற்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் வண்ணத்தமிழ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விசாரணையில், பெரியசாமி தனது மகனுக்கு விஷ ஊசியை செலுத்திக் கொன்றது தெரிய வந்தது. மேலும், இதற்கு கொங்கணாபுரத்தில் லேப் நடத்தி வரும் வெங்கடேஷ் (37), குரும்பப்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவ உதவியாளர் பிரபு (30) ஆகியோர் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து, பெரியசாமி உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ‘புற்றுநோயால் மகன் அவதிப்பட்டதால் விஷ ஊசி செலுத்திக் கொன்றதாக’ போலீஸாரிடம் பெரியசாமி தெரிவித்துள்ளார்.