

கரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இராமலிங்க அடிகளாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தில் அவரது படத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான வரைபடங்களைக் கோரி விளம்பரப்படுத்தியுள்ளோம். விரைவில் டெண்டர் கோரப்பட்டு வள்ளலார் சர்வதேச மையம் வெகு விரைவில் கட்டப்படும். சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை சீரமைக்க அரசு உதவி செய்யும்.
அன்னை தமிழில் வழிபாடு செய்யும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பாஜக போராட்டம் நடத்துகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
எனவே, வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி பாஜக போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த நிலை ஆண்டு முழுவதும் தொடராது. கரோனாவால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் கோயில்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.