

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் துளசிதாஸ், ராமு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து வீடு திரும்பும்போது, மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராமு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர் கொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சில டாஸ்மாக் கடைகள் நேற்று காலை திறக்கப்படவில்லை. ஆங்காங்கே மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.
பேச்சுவார்த்தை
பின்னர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியனுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். பின்னர், மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகி ராமு கூறும்போது, ``டாஸ்மாக் ஊழியரைக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அவரது வாரிசுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். உயிருக்குப் போராடும் ஊழியர் ராமுவுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடையடைப்பு, முற்றுகைப் போராட்டங்களை நடத்தினோம்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, துறை அமைச்சரிடம் பேசி, உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உறுதியளித்ததால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் 8-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் கூடிப்பேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்'' என்றார்.