டெங்கு, மலேரியா நோய் தடுப்புக்கு வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள்

டெங்கு, மலேரியா நோய் தடுப்புக்கு வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள்
Updated on
1 min read

டெங்கு, மலேரியா நோய் தடுப்புக்கு வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்று வணிகத்தை பெருமளவு பாதித்த நிலை நீங்கி, வணிகர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், பருவமழையின் தாக்கம் தொடங்கி இருக்கிறது. டெங்கு, மலேரியா போன்ற இதர நோய்கள் பரவுவதற்கான காலச்சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வணிகர்களும், தொழில்துறை சார்ந்தவர்களும், உற்பத்தியாளர்களும் அரசோடும், மாநகராட்சி ஆணையரோடும் இணைந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்த் தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைகளை பெற்று, எங்கும் கழிவு நீர் தேங்காமலும், மழைநீர் தேங்காமலும் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நம் வணிகத்தை பாதுகாத்திடவும், கரோனா பெருந்தொற்று 3-வது அலை பரவாமல் பாதுகாக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என அனைத்து வணிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in