

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர் நேர்காணல் முடிந்தது. விரைவில் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக என பல்வேறு தரப்பில் தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்பட்டதும் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கிவிடும்.
சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் இறுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருக்கும். அந்த நேரத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால் அரசியல் கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது, கொடிகள் நடுவது, தோரணங்கள் கட்டுவது, பிரச்சாரக் கூட்டங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படலாம் என்று புகார் எழுந்துள்ளது.
அரசியல் கட்சியினரின் குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளின்படி, தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த அனுமதிக்கக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.