

பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு, தக்கலை டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த தீபா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''நான் ஜெபர்சன் வினிஸ்லால் என்பவர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அவர் மயக்க மரு்ந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து எனக்குப் பாலியல் தொந்தரவு அளித்தார். அதை வீடியோவில் பதிவு செய்து, அவரது நண்பர்களின் பாலியல் ஆசைகளுக்கு இணங்குமாறு என்னை மிரட்டினார்.
அவரது நண்பர்களும் என்னைப் பலமுறை கூட்டு பலாத்காரம் செய்தனர். உடன்படாவிட்டால் என் மகனைக் கொலை செய்வதாகவும் மிரட்டினர். இதுகுறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் வினிஸ்லால் தற்கொலை செய்து கொண்டார். வினிஸ்லால் மனைவி பாலியல் வீடியோ பதிவுகளை எனது சித்தப்பா உட்படப் பலருக்கு அனுப்பினார். இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன்.
என் புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் விசாரணை நடைபெறவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரரின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், ''இந்த வழக்கில் மனுதாரரைக் குற்றவாளியாக்க முயற்சி நடைபெறுகிறது. குற்றவாளிகள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். இதனால் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, விசாரணை அறிக்கையைத் தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.