

அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்கக் கோரி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் அக்டோபர் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (அக்.5) இளைஞர்கள் அக்கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
''திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் திரையிட அனுமதிக்கின்றனர். இதைச் செய்யும் அரசு, எதற்காகக் கோயில்களை மட்டும் மூட வேண்டும்?. கோயிலுக்குச் சென்றால் கரோனா வரும் என்றால், திரையரங்குக்குச் சென்றால் கரோனா வராதா? வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், வியாழக்கிழமை, திங்கட்கிழமைகளில் கோயில்களில் அதிகக் கூட்டம் காணப்படுகிறது. அந்தக் கூட்டத்தில்தான் கரோனா பரவும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறந்து இருந்தால், கூட்டம் ஒரே சீராக இருக்கும். எனவே, வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 7-ம் தேதி காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் முன்பு பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.
பக்தர்கள், கோயில்களை நம்பி இருப்பவர்கள், அறத்தின் வழி நிற்பவர்கள் எல்லோரும் இதில் கலந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் கோயில்களைத் திறக்குமாறு அரசை வலியுறுத்த வேண்டும்''.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.