Published : 05 Oct 2021 06:30 PM
Last Updated : 05 Oct 2021 06:30 PM

கோயிலில் முடியிறக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5,000 வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

திருக்கோயில்களில் முடியிறக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை, வேப்பேரி, பி.கே.என்.அரங்கத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், திருக்கோயில் நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடக்கம், ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் திருக்கோயில்களில் நடும் திட்டம், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிகழ்வு, அன்னைத் தமிழில் அர்ச்சனை, தமிழில் அர்ச்சனை செய்வதற்காக 14 போற்றி நூல்கள் வெளியீடு போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு செலுத்தும் முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 5.9.2021 முதல் அனைத்துத் திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 7.9.2021 அன்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், திருக்கோயில்களில் பணிபுரியும் தலைமுடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, திருக்கோயில்களில் பணிபுரியும் 1,744 முடியிறக்கும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகை அந்தந்தத் திருக்கோயில்களிலிருந்து வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.10.47 கோடி செலவிடப்படும். இதனால் திருக்கோயில் முடியிறக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x