

சிங்காரா வனப்பகுதியில் டி.23 புலியின் கால்தடம் அடையாளம் காணப்பட்டதால், அப்பகுதியை வனத்துறையினர் சுற்றிவளைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலி இன்று பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூரில் நான்கு பேரைக் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணி 11-வது நாளாக இன்று (அக். 05) நடைபெற்று வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் டி.23 புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டாம் என உத்தரவிட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்திப் புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களாக ஆட்கொல்லிப் புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக புலியின் இருப்பிடம் குறித்த எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனால், புலி தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மசினகுடி - சிங்காரா வனப்பகுதி சாலையில் புலி நடமாட்டம் தென்பட்டதைத் தொடர்ந்து, சிங்காரா சாலையில் வேட்டைத் தடுப்புப் பிரிவினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களில் ஏறி அமர்ந்து புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
இன்று காலை, நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லிப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் சென்றனர்.
கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் சுற்றித் திரிந்த புலி, இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. புலியைப் பிடிக்கத் தொடர்ந்து பத்தாவது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மசினகுடி வனப்பகுதியில் சுற்றித் திரிந்த புலி, சிங்காரா வனப்பகுதியில் இடம்பெயர்ந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று (அக். 05) சிங்காரா வனப்பகுதியில் எருமை ஒன்றைப் புலி தாக்கி, இறைச்சியைப் புசித்துள்ளது. மேலும், உள்ளூர் வாகன ஓட்டுநர் ஒருவர், அந்தப் புலியை சிங்காரா மின்நிலையம் அருகே பார்த்ததாகக் கூறினார். அவர் அளித்த அடையாளங்கள் மூலம், அது தேடப்பட்டு வரும் புலிதான் என்று முடிவு செய்த வனத்துறையினர், சிங்காரா பகுதிக்கு விரைந்தனர்.
மிகவும் சோர்வுடன் புலி இருந்ததாக ஓட்டுநர் கூறிய நிலையில், இன்று அதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். வனப்பகுதியைச் சுற்றி வசிக்கும் கிராம மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், 6 கால்நடை மருத்துவக் குழு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து, பழங்குடியினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே புலி இருக்கும் இடத்தை அறிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து டைகர் எனும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதவை மற்றும் ராணா ஆகிய மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், டைகரும் பணியில் இறக்கப்பட்டது.
டி.23 புலியை இன்று பிடித்துவிடுவோம் என்றும் வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.