

மத்திய ரயில்துறை பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ’வாகன மையம்’ (ஆட்டோ ஹப்) வாலாஜாபாத்தில் அமைகிறது. இந்த தகவல் இன்று ரயில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் தனது 2016-17 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பித்தார். இதில், நாட்டின் முதல் வாகன மையம் அமைக்க தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கான குறிப்பிட்ட இடமாக சென்னை ரயில் நிலையப் பகுதியில் நிர்வாகிக்கப்பட்டு வரும் வாலாஜாபாத் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகள் நிஸான், ஹுண்டாய், ஃபோர்டு மற்றும் டைம்லர் கிரிஸ்லர் ஆகிய நிறுவனங்கள் தம் வாகன தயாரிப்புகளை செய்து வருவது காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
சுமார் 5000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் வாகன மையம் 300 வாகனங்கள் அனுப்பும் கொள்ளளவில் அமைக்கப்பட உள்ளது. டாடா மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களின் தயாரிப்பு வாகனங்களை தமிழகம், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் முக்கிய மையமாக வாலாஜாபாத் விளங்க இருக்கிறது. இது, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் மையமாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக அதன் வாகன தயாரிப்பு மற்றும் விநியோகப் பகுதிகளில் இருந்து 4 மற்றும் 6 வழிச்சாலைகளும் அமைந்துள்ளன. இங்கு போதுமான மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும். தற்போது வாகன தயாரிப்புகளின் போக்குவரத்தின் 4 சதவிகிதம் இந்தியன் ரயில்வேயில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், ரயில்துறைக்கு 2015-16 ஆம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது வரும் 2016 ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதிய சேமிப்புக்கிடங்கு மற்றும் போக்குவரத்து ஆகிய வசதிகள் இல்லாமையால் பல சமயம் முக்கிய நுகர்வோர்களை ரயில் துறை இழக்க நேரிடுவதாக அமைச்சர் சுரேஷ் தனது படெஜெட்டில் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மையம் தென் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும்.