Published : 05 Oct 2021 01:38 PM
Last Updated : 05 Oct 2021 01:38 PM

ஆஸ்கர் விருதுபோல மகிழ்ச்சி: ஆட்டுக்குட்டியைப் பரிசாகப் பெற்ற அண்ணாமலை பெருமிதம்

சென்னை

பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியைப் பரிசாக அளித்தபோது ஆஸ்கர் விருதுபோல மகிழ்ச்சி அடைவதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். கர்நாடக கேடராகப் பல மாவட்டங்களில் எஸ்.பி.யாகப் பணியாற்றி, பெங்களூர் நகர துணை ஆணையராகப் பணியாற்றும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். அது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பேசுபொருளாக மாறியது.

மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்ததாகக் கூறிய அண்ணாமலை, கரூரில் சொந்த மாவட்டத்தில் தனது நிலத்தில் விவசாயம் செய்துகொண்டே, காணாமல்போன ஏரிகளை, நீர்நிலைகளை மீட்பது, காங்கேயம் காளை இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது ஆட்டுக்குட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அதைத் தொடர்ந்து அண்ணாமலை யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானார்.

அதையடுத்து அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜகவில் இணைந்ததில் இருந்தே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அண்ணாமலை விமர்சித்து வருகிறார். அதற்கு பதிலடியாக, திமுகவினர் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியைப் பரிசாக அளித்தபோது ஆஸ்கர் விருதுபோல மகிழ்ச்சி அடைவதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சென்னிமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பரிசாகத் தந்திருக்கிறார்கள்.

ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி. அதிலும் கொங்கு மண்டலத்தின் வேளாண் சின்னமாக, நம் பண்பாட்டின் விழுமியமாக நான் ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறேன்!'' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x