Last Updated : 05 Oct, 2021 01:36 PM

 

Published : 05 Oct 2021 01:36 PM
Last Updated : 05 Oct 2021 01:36 PM

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து: புதுவை ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி

வெளியுறவுத்துறை அனுமதிக்குப் பின் காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, அந்தமான் என்சிசி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி புதுவை என்சிசி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் கடல் சாகசப் பயணம் நடத்தப்படுகிறது.

என்சிசி மாணவர்கள் இன்று புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கி கடல் வழியாக காரைக்காலுக்குச் செல்கின்றனர். இந்தப் பயணத்தை ஆளுநர் தமிழிசை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். என்சிசி குழும நிர்வாக அதிகாரி கர்னல் அருண் சர்மா முன்னிலை வகித்தார். 3 பாய்மரப் படகில் 5 தமிழக என்சிசி பிரிவின் கமாண்டிங் அதிகாரி, லெப்டினன்ட் கமாண்டர் ரவிசங்கர் தலைமையில் 25 மாணவிகள் உட்பட 60 மாணவர்கள் காரைக்காலுக்குப் புறப்பட்டனர்.

இந்தக் குழுவுடன் ஒரு கப்பல் படை அதிகாரி, 2 என்சிசி அதிகாரிகள், 6 கப்பற்படைப் பயிற்சியாளர்கள், 27 அலுவலகப் பணியாளர்கள் உடன் செல்கின்றனர். புதுவையிலிருந்து புறப்பட்ட சாகசக்குழு கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி வழியாக காரைக்கால் சென்று பின்னர் அங்கிருந்து அதே வழித்தடத்தில் வரும் 15-ம் தேதி புதுவைக்குத் திரும்புகிறது. 302 கி.மீ. தொலைவை 11 நாட்களில் மாணவர்கள் சென்று வருகின்றனர்.

சாகசப் பயணத்தின் மூலம் மாணவர்கள் பாய்மரப் படகு செலுத்தும் பயிற்சி, கடல்சார் பயிற்சி, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துதல், கடல் தூய்மை, மரக்கன்று நடுதல் ஆகியவற்றைச் செய்கின்றனர்.

மாணவர்களின் பயணத்தைத் தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுவையிலும் சுற்றுலாவை வளர்க்க கடல் பயணம் மூலம் காரைக்காலுக்குச் செல்ல முன்னோட்டமாக அமையும். காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு ஏற்கெனவே கப்பல் போக்குவரத்து இருந்தது. இது திடீரென நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதுகுறித்து இலங்கை அமைச்சர்கள், தூதர்கள் பேசியுள்ளனர். வெளியுறவுத்துறையில் சில அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. அதன்பின் இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x