நீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

கார்த்திக்
கார்த்திக்
Updated on
1 min read

நீதிபதிபோன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கி ஏமாற்றிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த உமையன் என்பவர் மகன் சிவநாத். இவர் 2005-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

ரூ.43 லட்சம் மோசடி

இந்நிலையில், திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என உமையனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் வழக்கில் இருந்து சிவநாத்தை விடுவிக்க உதவுவதாகக் கூறி பல்வேறு கட்டமாக ரூ.43 லட்சம் வரை ஏமாற்றி வாங்கி உள்ளார்.

ஒருகட்டத்தில் வழக்கில் இருந்து சிவநாத் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறி, விடுதலை அறிக்கை ஒன்றையும் மாவட்ட நீதிபதி கையெழுத்துடன் உமையன், சிவநாத் ஆகியோரிடம் கார்த்திக் வழங்கியுள்ளார்.

கையெழுத்தில் சந்தேகம்

இதில் உமையனுக்கு சந்தேகம் வரவே, வேறு வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற உத்தரவை காட்டியுள்ளார். அப்போது நீதிபதி கையெழுத்தை போலியாகப் போட்டு விடுதலை அறிக்கை கொடுத்திருப்பதும், கார்த்திக் என்பவர் வழக்கறிஞரே இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றப் பரிந்துரையின்படி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்-2 ல் நடைபெற்றது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், போலி வழக்கறிஞராக செயல்பட்டும், நீதிபதிபோன்று கையெழுத்திட்டும் ரூ.43 லட்சம் மோசடி செய்ததற்காக கார்த்திக்குக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீஸார் கார்த்திக்கை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in