9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு: 39 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு: 39 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது
Updated on
2 min read

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் இன்று அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த செப்.13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இத்தேர்தலில் போட்டியிட 27 ஆயிரத்து 791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மொத்தம் 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 15 ஆயிரத்து 287 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். 3 ஆயிரத்து 346 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியாக, 24 ஆயிரத்து 416 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 80 ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 26-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்தது. 9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர்கள் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அவர்களை வெளியேற்றும் பணியில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நேற்று மாலை ஈடுபட்டனர். வெளியேறாதவர்கள் மீது தேர்தல் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் போன்றவற்றிலும் நேற்று இரவு சோதனை நடத்தினர்.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், நேற்று காலை 10 மணி முதலே தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூடியிருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி பணி ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் 13 வகையான கரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்கள் ஆகியவற்றுடன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 17 ஆயிரத்து 130 போலீஸார், 3 ஆயிரத்து 405 ஊர்க் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டன. அவர்களும் இன்று வாக்குப்பெட்டிகளுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில், செயலர் எ.சுந்தரவல்லி முன்னிலையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. அதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அல்லது வீடியோ ஒளிப்பதிவு அல்லது இணையவழி வீடியோ பதிவு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மேலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 9 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கவனமுடன் செயல்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

39 ஒன்றியங்களிலும் நாளை காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in