Published : 07 Mar 2016 02:52 PM
Last Updated : 07 Mar 2016 02:52 PM

குமரியில் மகுடம் சூடுமா மக்கள் நலக் கூட்டணி?- களப்பணிகள் 6 தொகுதிகளிலும் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக கட்சியினர் தேர்தல் பணியை தொடங்கும் முன்பே தீவிர களப்பணியை துவக்கியுள்ளது மக்கள் நலக் கூட்டணி. கூட்டணிக்குள் தொகுதி பங்கீடே முடிவடையாத சூழலில் அக்கூட்டணியில் உள்ள 4 கட்சியினரும் இணைந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வசம் 2 தொகுதிகளும், திமுக வசம் ஒரு தொகுதியும், காங்கிரஸ் வசம் 3 தொகுதிகளும் (அதில் ஒன்று தற்போது தமாகாவிடம்) உள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு குமரி மாவட்டத்தில் இப்போது மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என அக்கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுறுசுறுப்பான மதிமுக

நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளில் மதிமுக களம் இறங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. குளச்சலில் இப்போதே மதிமுக சார்பில் தேர்தல் விளம்பரங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. நாகர்கோவில் நகரில் மந்த கதியில் நடைபெற்று வந்த பாதாளச் சாக்கடை பணிகள், மோசமான சாலைகள் உள்ளிட்ட விவகாரங்களை மையப்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியது, குளச்சலில் இயல்பாகவே தொகுதிக்குள் இருக்கும் வாக்கு வங்கி ஆகியவற்றை நம்பி இத்தொகுதிகளை மதிமுக குறிவைத்துள்ளது.

கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தொழிலாளர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதால், அத்தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வியூகம் வகுக்கும் மார்க்சிஸ்ட்

விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. பத்மநாபபுரம் தொகுதிக்குள் இடதுசாரிகளின் வாக்குகள் கணிசமாக உள்ளது. ரப்பர், முந்திரி தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர். எனவே, விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி களம் இறங்க வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், பழங்குடி மக்களின் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அது தொடர்பான போராட்டங்களில் பஙகேற்ற மக்கள், தங்களை ஆதரிப்பார்கள் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.

கன்னியாகுமரியை குறிவைக்கும் வி.சி.

மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி கன்னியாகுமரி. இங்கு வெள்ளாளர், நாடார் சமூக வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தலித் மக்களின் வாக்குகள் உள்ளன. மாவட்டத்தில் மற்ற தொகுதிகளை விட, தலித் மக்கள் இத்தொகுதியில் அதிக அளவில் உள்ளதால் மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இத்தொகுதியை கேட்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் உள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றி மகுடம் கிடைக்குமா என்பது தேர்தல் முடிவின்போது தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x