

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குமரன் நினைவிடத்தில், திருப்பூர் குமரனின் 118 -வது பிறந்த நாளை ஒட்டி, குமரன் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் குமரனின் தியாகம் நிறைந்த வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்க கூடிய ஒன்று. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது, அவர்களின் கட்சி சார்ந்த தனிப்பட்ட விஷயம். அவர்களின் கட்சியை வளர்க்க எடுக்கப்பட்ட முடிவில், பாஜக தலையிடாது.
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த முறை போட்டியிடும் அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களை களமிறக்கி உள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களின் மனநிலை என்பது, மாறக்கூடிய ஒன்று. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.