Published : 05 Oct 2021 03:12 AM
Last Updated : 05 Oct 2021 03:12 AM

புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு தரம் ஆய்வு; கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர் குழு பரிந்துரை

சென்னை

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ல் ரூ.112 கோடியில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அங்கு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பரசன், "இது தொடர்பாக ஐஐடி குழு மூலம் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.

இதற்கிடையே, சென்னை ஐஐடி பேராசிரியர் பத்மநாபன் தலைமையிலான நிபுணர் குழு, கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒரு மாதத்துக்கும் மேலாக ஆய்வு செய்தது.

சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம், ஐஐடி குழுவின் ஆய்வறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

"இந்தக் குடியிருப்புகள் உரிய தரத்துடன் கட்டப்படவில்லை. எனவே, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனம் மீதும், வாரியத்தின் இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனம், மாநிலத்தின் பிற பகுதிகளில் கட்டியுள்ள கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன், இந்த கட்டுமான நிறுவனத்தை தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை ஆய்வுக் குழு அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x