

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தில் முதல் முறையாகக் கடந்த 2019-ம் ஆண்டு 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் தேர்தலாக 2019 அமைந்தபோதிலும், அவர்களின் கணவர்களே ஆதிக்கம் செலுத்த முயல்கிறார்கள்.
விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆண் வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதியில் ஆண்களும், பெண்கள் போட்டியிடும் பகுதியில் தம்பதியினருமாக வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பெண் வேட்பாளர்கள், தங்கள் கணவரின் புகைப்படம் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை மக்களிடம் விநியோகப்பது மட்டுமின்றி, என்ன பணிகள் நடைபெறும், என்ன வாக்குறுதிகள் எனக் கணவரையே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இந்த நிலை அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றதைக் காண முடிந்தது. மேலும் ஊரில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் ப்ளக்ஸ், சுவரொட்டிகள் அனைத்திலும் கணவன், மனைவி இருவரும் கைகூப்பி, வாக்குச் சேகரிக்கும் போஸ்டர்கள் ஊரை அலங்கரித்துக் கொண்டிருந்தன.
இதுகுறித்து அறிய கடலூர் மாவட்ட அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழியிடம் கேட்டோம். அப்போது அவர் கூறுகையில் ''பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வரவேற்கக் கூடியதுதான். ஆனால், உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் தேர்தலின்போதே பெண் போட்டியிடும் ஊராட்சிகளில் பெண் படம் மட்டுமே இடம்பெறவேண்டும் என்ற வகையில் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுக்க வேண்டும். இதைப் பிரச்சாரத்திலேயே முன்வைக்க வேண்டும்.
பல கிராமங்களில் பெண்கள் தேர்வானாலும் அவர்களின் கணவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஊராட்சிக்கு வரும் நிதியை எந்தத் திட்டங்களுக்குச் செலவிடவேண்டும் என, தேர்வான பெண் தலைவரின் கணவர்தான் தீர்மானிக்கும் நிலையில், பெண் கையொப்பம் மட்டுமே இடுகிறார். இதுபோன்ற நிலை தொடரக்கூடாது. இந்த முறை அதிக எண்ணிக்கையில் எல்லா கிராமங்களிலும் பெண்கள் தேர்வாகியிருப்பதால், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆரியநத்தம் கிராமத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட அற்புதவள்ளி என்பவரிடம், போஸ்டரில் கணவரின் படத்தை அச்சிட்டு வாக்குச் சேகரித்தது குறித்துக் கேட்டபோது, ''நான் பி.எட். பட்டதாரிதான், இருப்பினும் கிராம நிர்வாகம் குறித்த அனுபவம் குறைவு. எனது கணவர் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டாலும் அனுபவம் அதிகம். அதனால் எனது கணவர் உறுதுணையாக இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
அதே ஊரில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அமலா என்பவரின் கணவர் சந்தோஷ்குமார், கணவன் மனைவி அடங்கிய போஸ்டரை அச்சடித்து வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேசினோம். ''இந்த வார்டில் நான் நன்கு அறிமுகமானவன். எனது மனைவி பட்டதாரி, நான் பள்ளிப் படிப்புதான் முடித்திருக்கிறேன். எனக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே எனது மனைவியைப் போட்டியிடச் செய்திருக்கிறேன். அவருக்கு வழிகாட்டியாக இருப்பதில் தவறேதும் இல்லை. இதில் அவர் பதவியை நான் எப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும்'' என்று தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள், தலைவர்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கம் ,காணொலிக் காட்சி வாயிலாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற்றது.
இதில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மாற்றாக அவரது கணவர்களும், மகன்களுமே பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண் தலைவர்களின் கணவர்களிடம் பேசியபோது, ''அவர்களுக்குப் போதிய அனுபவம் கிடையாது, எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாது. அதனால் நாங்கள் கலந்துகொண்டோம்'' என்று தெரிவித்தனர்.