அதிமுக - தமாகா கூட்டணி நாளை முடிவாகும்?- இருதரப்பிலும் தொடரும் ரகசிய பேச்சுவார்த்தை

அதிமுக - தமாகா கூட்டணி நாளை முடிவாகும்?- இருதரப்பிலும் தொடரும் ரகசிய பேச்சுவார்த்தை
Updated on
1 min read

அதிமுக - தமாகா கூட்டணியை நாளைக்குள் முடிவுக்கு கொண்டுவர இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 52 நாட்கள் உள்ளன. வேட்பு மனுதாக்கல் ஏப்ரல் 22 தொடங்கி, 29-ம் தேதியுடன் முடிகிறது.

நாட்கள் நெருங்குவதால் கூட்டணி அமைப்பதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன.

ஆளுங்கட்சியான அதிமுக வுக்கு ஏற்கெனவே 6 கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தமாகா, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், புரட்சி பாரதம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அழைப்புக்காக காத்திருக்கின்றன.

கட்சி தொடங்கியது அதிமுக அரசு மீதான விமர்சனத்தை தவிர்த்து வரும் தமாகா தலைவர் வாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிமுக 10 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் அதிருப்தியில் இருக்கும் வாசனை இழுக்க மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகிறது. இதற்காக வாசனுடன் விஜயகாந்த் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தமாகாவுக்கு 16 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும், இது தொடர்பாக இருதரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தமாகாவுடன் கூட்டணி அமைப்பதுடன், அக்கட்சிக்கு 15 இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரலாம் என தலைமை விரும்புகிறது. இந்த விவரம் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் 20 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்கின்றனர். எனவே, இழுபறி ஏற்பட்டுள்ளது. ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் உடன்பாடு ஏற்பட்டுவிடும்’’ என்றார்.

ஆனால், தற்போது திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு குறைந்தது 30 தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் உடன்பாடு ஏற்படுவது தாமதமாகும் என தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவிருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், வாசன் வரவில்லை.

இது தொடர்பாக, தமாகா மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘அதிமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கை உறுதியானால் மட்டுமே ஜெயலலிதாவை வாசன் சந்திப்பார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in