

பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகள், களியக்காவிளை எல்லையில் கேரள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. அப்போது பாரம்பரிய முறைப்படி கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி, சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இந்தப் பாரம்பரிய நிகழ்வு கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இந்த ஆண்டும் அதைப் போன்றே குறைவான பக்தர்கள் பங்களிப்புடன் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் நேற்று புறப்பட்டுச் சென்றன. வழக்கமாக நடைபெறும் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைக்கான யானை பவனி ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் பல்லக்கைச் சுமந்துகொண்டு சென்றனர்.
நேற்று மாலை குழித்துறை மகாதேவர் ஆலயத்தை அடைந்த சுவாமி விக்ரகங்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டன. பின்னர் இன்று காலை சிறப்புப் பூஜையுடன் சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டன. களியக்காவிளை எல்லையை சுவாமி விக்ரகங்கள் அடைந்ததும் பேண்ட் வாத்திய இசை முழங்க, கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். வழிநெடுகிலும் சிலைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு, பூஜைகள் எதற்கும் அனுமதி இல்லாததால் வழக்கமாக மதியத்தில் களியக்காவிளை செல்லும் சுவாமி சிலைகள், இன்று காலையிலேயே எல்லைப் பகுதியை அடைந்தன.
களியக்காவிளை எல்லையில் போலீஸார் அணிவகுப்பு மரியாதைக்குப் பின்னர் கேரள அறநிலையத் துறையினரிடம் குமரி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. தக்கலை டிஎஸ்பி கணேசன், நெய்யாற்றின்கரை டிஎஸ்பி அனில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் களியக்காவிளை எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு தலைவர் வாசு, நெய்யாற்றின்கரை எம்எல்ஏ ஆன்சலன், கோவளம் எம்எல்ஏ வின்சன்ட், விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் தமிழக, கேரள பிரமுகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.