

சென்னை கே.கே.நகர் பகுதியில், திரைப்படப் பாணியில் சாலையோரக் கடைகளில் இளநீர்க் காய்களைத் திருடிச் சென்று தனியாகக் கடை நடத்தி, நூதனத் திருட்டில் ஈடுபட்ட நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் 80 அடி சாலையில் சாலையோரத்தில் ஏராளமான இளநீர்க் கடைகள் இயங்கி வருகின்றன. அக்கடைகளுக்கு மொத்தமாக ஆயிரக்கணக்கில் இளநீர் லோடு வந்து இறங்குவது வழக்கம். அதைத் தார்ப்பாய் கொண்டு மூடிவைத்திருக்கும் கடைக்காரர்கள், மறுநாள் பிரித்துப் பயன்படுத்துவர்.
இவ்வாறு கடைகளில் மூடிவைக்கப்பட்டிருக்கும் இளநீர் குலைகளில் சில, தொடர்ந்து திருட்டுப் போய்க்கொண்டே இருந்தன. குறிப்பாக அதே பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடை நடத்திவரும் லிங்கம் என்பவரின் கடையில் இருந்து நூற்றுக்கணக்கான காய்கள் திருட்டுப் போயின. தினந்தோறும் காய்கள் இவ்வாறு திருடப்படுவதை அறிந்த லிங்கம், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அதில் நள்ளிரவில் நபர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிளில் காய்களைத் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே இளநீர் திருடியதாக சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரைப் பொதுமக்கள் பிடித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் லிங்கம் உட்படப் பல்வேறு நபர்களின் கடைகளில் திருடிச் சென்று, கோயம்பேட்டில் ரஜினிகாந்த் தனியாகக் கடை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரஜினிகாந்தை கே.கே.நகர் காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
’கோயில் காளை’ என்னும் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி வைத்திருக்கும் இளநீர்க் கடையில் இருந்து காய்களைத் திருடி செந்தில் கொடுப்பார். அதை வைத்து வடிவேலு தனியாகக் கடை நடத்துவார். அந்தப் பாணியில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.