திருப்பத்தூர் அருகே வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை: குறியீடு பாறை கண்டெடுப்பு

வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடு பாறை.
வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடு பாறை.
Updated on
1 min read

திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடுகள் அடங்கிய பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், விஷ்ணு, ஞானவேல், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆடங்கிய ஆய்வுக்குழுவினர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, அங்கு வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான ஆவணமாக அறியப்படும் குறியீடுகள் அடங்கிய பாறையைக் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறியதாவது:

"பழங்காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி வந்தனர். அவ்வாறு நிலங்களை தானமாக வழங்கும் கொடைகளுக்குச் சான்றாக கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக எழுத்துப்பூர்வமாக அதிகாரத் தகவல்களை அந்தக் காலத்தில் தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல சான்றாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பழந்தமிழர்களின் வாழ்வியல் பதிவுகளை விவரிக்கும் பல்வேறு தடயங்கள் சமீபகாலமாகக் கண்டறியப்பட்டு, அது ஆய்வுக் குழு மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் என்ற கிராமத்தில் எங்கள் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 'மேலக்குட்டை ஏரியின்' கீழ்ப்பகுதியில் விவசாயி தனபால் என்பவருக்குச் சொந்தமான நிலத்தின் நடுவே இயற்கையாக அமைந்துள்ள சிறிய பாறையில் குறியீடுகள் பல இருப்பதைக் கண்டறிந்தோம்.

முக்கோண வடிவமுள்ள அந்தப் பாறையில் சூரியன், பிறைச்சந்திரன் உருவங்கள் மேற்புறமும், அதன் கீழே குடையும் அதன் அருகே கமண்டலமும் அமைந்துள்ளன. அதன் அருகே அளவுகோலும், பாதங்களும் காட்டப்பட்டுள்ளன.

இக்குறியீடுகள் திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. பொதுவாக சாசனங்கள் எழுத்து வடிவில் பொறிக்கப்படுவது மரபு. அதற்கு மாறாக, இங்கே கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

இந்தக் கோட்டோவியக் கல்லானது ஒருவர் தமது ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை வைணவக் கோயில்களுக்காகக் கொடையாகக் கொடுத்து அதன் விவரத்தை இக்குறியீடுகள் எடுத்துக் காட்டுகின்றன. இக்கோட்டோவியக் கல்லானது கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் வரலாற்றுப் பின்புலத்தைப் பறைசாற்றும் சிறப்புக்குரிய ஆவணமாகும். இத்தகைய வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்".

இவ்வாறு பேராசிரியர் முனைவர் பிரபு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in