சிலைகள் அனைத்தும் சரியாக உள்ளதா?- கோயில்களில் ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு: உடனுக்குடன் அறிக்கை அனுப்ப ஆணையர் அறிவுறுத்தல்

சிலைகள் அனைத்தும் சரியாக உள்ளதா?- கோயில்களில் ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு: உடனுக்குடன் அறிக்கை அனுப்ப ஆணையர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வுசெய்ய தொல்லியல் துறை சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில் சில கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை காணவில்லை. அவற்றை கண்டறிந்து மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்களை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, சென்னை மண்டலத்தில் தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி, வேலூர் மண்டலத்தில் ரஞ்சித் சுபாஷினி உள்ளிட்ட 28 அலுவலர்களை கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று இந்த குழுவினர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

பாதுகாப்பு மையங்களில் ஆய்வு

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து இணைஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொல்லியல் துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து, பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோயில்களில் சிலைகள் சரியாகஉள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தொல்லியல் துறையால் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையம், கோயில்களில் உள்ள சிலைகளை ஆய்வு செய்வதற்காக 28 அலுவலர்களைக் கொண்ட 12 குழுக்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, குழுக்களின் ஆய்வுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு இணைஆணையர்கள், உதவி ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆய்வு தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in