Published : 04 Oct 2021 03:11 AM
Last Updated : 04 Oct 2021 03:11 AM
தமிழகத்தில் கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கரோனா இறப்பில் 90 சதவீதம்தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 24 ஆயிரம் இடங்களில் 4-ம் கட்ட மெகா கரோனாதடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மருத்துவமமனை டீன் ஜெயந்தி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற்ற 3 கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நல்ல வெற்றியை தந்துள்ளது. 4-வது கட்ட முகாம் 24 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடக்கிறது. தமிழகத்தில் இதுவரை 4.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில்மட்டும் 4.54 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கரோனா இறப்பில் 90 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக உள்ளனர். 2 தவணை தடுப்பூசி போட்டவர்களில் 3.5 சதவீதமும் ஒருதவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியவர்களில் 7.4 சதவீதத்தினரின் இறப்பு பதிவாகியுள்ளது. 42 சதவீத முதியோர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒருகாலத்தில் 3.11 லட்சமாக இருந்தசிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது.
வீடு தேடிச்சென்று தடுப்பூசி
தமிழகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் டெல்டா வகை கரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. வேறு புதிய வகை கரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது கரோனாவுடன், டெங்கு பாதிப்பும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விசயமாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பல இடங்களில் தண்ணீரை மூடி வைக்காத நிலை தற்போதும் இருக்கிறது. இதன்மூலம் ஏடிஸ் கொசு பரவக்கூடும். தினமும் 20 டெங்கு பாதிப்பு பதிவாகிறது. இந்த ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 2,919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு இறப்பு 2 ஆக உள்ளது. பூச்சியியல் வல்லுநர்கள் கொசுக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் டெங்கு பெரும் பாதிப்பாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT