வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் கரோனா பரவும் அபாயம்

கொடைக்கானல் பைன் பாரஸ்ட் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் பைன் பாரஸ்ட் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் முகக்கவசம் அணியாமல் வந்ததால், கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலையால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. அண்மையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிடலாம் என அரசு அறிவித்தது.

போக்குவரத்து நெரிசல்

இதையடுத்து கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான கார்களில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால் மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் சாலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் காத்திருந்தனர்.

மோயர்பாய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கொடைக்கானலில் நேற்று அதிகபட்சமாக பகலில் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த அளவாக இரவில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது. மாலை நேரத்திலேயே குளிர் தொடங்கிவிடுவதால் குளிரைத் தாங்க முடியாத பலரும் ஒரே நாள் கொடைக்கானலுக்கு வந்துவிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர்.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணியாமல் வந்தனர். சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் இருப்பதைக் காண முடிகிறது.

உள்ளூர் மக்கள் அச்சம்

இதனால் கரோனா பரவல் அதிகரித்து விடுமோ என்று உள்ளூர் மக்கள் அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in