திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் புறப்பாடு: மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம்  பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
Updated on
1 min read

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சிலைகள் நேற்று புறப்பாடாகின. அரண்மனையில் நடைபெற்ற மன்னரின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்வில் தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் இவ்விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. பாரம்பரியம் மிக்க இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு, நவராத்திரி விழாவில் வைத்து பூஜை செய்யப்படும்.

நவராத்திரி விழா வரும் 6-ம் தேதி தொடங்கும் நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் புறப்படும் வைபவம் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் நேற்று காலை நடைபெற்றது.

இதற்காக நேற்று முன்தினமே சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், நேற்று அதிகாலையில் வேளிமலை முருகன் சிலைகள் சப்பரத்தில் பவனியாக அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டன. தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலையும் அரண்மனை வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

உடைவாள் மாற்றும் நிகழ்வு

தொடர்ந்து தமிழக, கேரள கலாச்சாரத்தை பறைசாற்றும் பாரம்பரிய நிகழ்வான மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் நிகழ்வு அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடைபெற்றது. அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் உடைவாளை கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தார். அவர்கள் அதை கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைத்தனர்.

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி எஸ்.பி. பத்ரிநாராயணன், சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், கேரள எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 3 சுவாமி சிலைகளும் பல்லக்கில் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடாகின. பல்லக்கின் முன்னால் மன்னரின் உடைவாள் ஏந்திச் செல்லப்பட்டது. 3 சிலைகளும் இன்று இரவு பத்மநாபசுவாமி கோயிலை சென்றடையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in