Last Updated : 04 Oct, 2021 03:12 AM

 

Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM

கைத்தறி ஆடைகள், பட்டு சேலைகள் விற்பனையை ஊக்கப்படுத்த தீபாவளிக்கு தள்ளுபடிகளை அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் தயார் செய்த கைத்தறி, பட்டுச் சேலைகள்.

மாமல்லபுரம்

தீபாவளி உட்பட அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால், பட்டு கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி ஆடைகள் மற்றும் பட்டுச்சேலை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கான தள்ளுபடி அறிவிப்புகளை, தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகள் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், உயர்வான கூலியை கருத்தில் கொண்டு பட்டு வேட்டிகள் மற்றும் முகூர்த்த பட்டுச்சேலை தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். விலை அதிகமான பட்டுச்சேலைகளை பொதுமக்கள் அதிகம் விரும்புவதில்லை. ஏனென்றால், முகூர்த்த பட்டுச்சேலையாக ஒன்று மட்டுமே வாங்குகின்றனர்.

ஆனால், விசேஷங்களின்போது உறவினர்களுக்கு வழங்குவதற்காக ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மதிப்பிலான பட்டு வேஷ்டி மற்றும் சேலைகளையே அதிகம் விரும்புகின்றனர். இதை தனியார் நிறுவனங்கள் சரியாகப் புரிந்துகொண்டு, விலை குறைவான பட்டுச்சேலைகள் மற்றும் வேஷ்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன.

ஆனால், ஒருசில கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே இந்த முறையில் திட்டமிட்டு பட்டுச்சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், கைத்தறியில் தயாரிக்கப்படும் ஆடைகள் மற்றும் கைலிகள் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை, அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதால், கைத்தறி ஆடைகள் மற்றும் பட்டுச்சேலைகளுக்கான தள்ளுபடி அறிவிப்புகளை விரைவாக வெளியிட்டு, தனியாருக்கு இணையாக விற்பனையை அதிகரிக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் கூறியதாவது: கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் தாமதமாகவே தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடும் நிலை உள்ளது. இதனால், கூட்டுறவு சங்கங்களில் அதிகளவில் விற்பனை பாதிக்கப்படுகிறது.

மேலும், 20 சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு வந்தாலும் ரூ.200 மட்டுமே தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. அதனால், முழு விலையில் 20 சதவீதம் தள்ளுபடி என்பதை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம், கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி ரகங்களின் விற்பனை அதிகரிக்கும். நெசவாளர்கள் பயன்பெறுவர் என்றார்.

இதுகுறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை விரைவில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கான தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நம்புகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x