Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM
மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்த திட்டங்களையும் திமுக நிறைவேற்றவில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
அத்தியாவசியமான குடிநீர் ஓரிரு ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் வீட்டு வாசலிலேயே கிடைக்கச் செய்யும் ஜல்ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்காக தமிழகத்துக்கு ரூ.3,169 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளாட்சிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லாத நிலையில் தமிழகத்தில் திமுகவினர் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் பெறுகின்றனர்.
திமுக தேர்தலுக்கு முன் அறிவித்த எந்த வாக்குறுதியையாவது முழுமையாக நிறைவேற்றி உள்ளதா என்று மக்கள் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் தொடங்கி, கல்விக் கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பிறகு எதற்காக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என முதல்வர் கூறுகிறார்?
பாஜக அனைத்து சமூகத்தையும் அரவணைத்துச் செல்லக் கூடிய கட்சி. முத்தலாக் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது பாஜக. இஸ்லாமிய சகோதரிகளுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். காங்கிரஸ்-திமுக கூட்டணியை போல் எங்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது என்றார்.
இந்தப் பிரச்சாரத்தை தொடர்ந்து மொளச்சூர் பகுதியில் உள்ள கட்சி பிரமுகரின் குடிசை வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்தியவாறு அவர்களுடன் அண்ணாமலை உரையாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT