கட்டாய கல்வி திட்டத்தில் சேர்க்க மறுப்பு: ஏழை மாணவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - பள்ளிக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவு

கட்டாய கல்வி திட்டத்தில் சேர்க்க மறுப்பு: ஏழை மாணவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - பள்ளிக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவு
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகேயுள்ள குரும்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.ரமேஷ். இவரது மகன் முத்துக்குமார். கடந்த 2010-ல் திருத் துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், இலவச மற்றும் கட்டா யக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் முத்துக்குமார் எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், அதற்கடுத்த ஆண்டு களில் முத்துக்குமாரிடம் ரூ.16,710 வசூலித்துள்ளனர். மேலும், தொடர்ந்து அவருக்கான கட்ட ணம் செலுத்தப்படாததால், ஓராண் டாக பாடப் புத்தகங்கள் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பள்ளியிலிருந்து மாணவரை நீக்கியுள்ளனர். பின்னர், மாணவர் முத்துக்குமார் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், முத்துகுமாரின் தந்தை பொன்.ரமேஷ், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத் தலை வர் வி.ஜெயச்சந்திரன், மாணவர் முத்துக்குமாரை 2016-2017ம் கல்வியாண்டில் 4-ம் வகுப்பிலும், அவருடைய சகோதரி பாவனா ஸ்ரீயை 2-ம் வகுப்பிலும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று தனியார் மெட்ரிக். பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கட்டாய கல்விச் சட்டத்தை மீறி, முத்துக்குமாரிடம் வசூலித்த ரூ.16,710 தொகையை, 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். பொன்.ரமேஷுக்கு ஏற்பட்ட வேதனை மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம், வீண் செலவு ஏற்படுத்தியமைக் காக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். இழப்பீட்டுத் தொகையை 6 வாரங்களுக்குள் வழங்காவிட்டால், 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென வும் அவர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சரியான நடைமுறையை மேற்கொள்ளாத, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சி.நடராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.நிர்மலா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சபீதா, மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் பிச்சை ஆகியோர், தலா ரூ.10,000 வீதம் நுகர்வோர் சட்ட உதவிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in