பள்ளியில் பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்தும்போது நடனம்: 3 மாணவர்கள் நீக்கம்

பள்ளியில் பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்தும்போது நடனம்: 3 மாணவர்கள் நீக்கம்

Published on

ராசிபுரம் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய 3 மாணவர்களைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அருகே புதுச்சத்திரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் பன்னீர்செல்வம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் உள்ளார். அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளியின் 9-ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த மாணவர்கள் 2 பேர் திரைப்படப் பாடலுக்கு நடனமாடினர்.

இதை ஒரு மாணவர் தனது செல்போனில் பதிவிட்டு, அதை வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியர் குணசேகரன் அந்த மூன்று மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து வெளியேற்றினார்.

எனினும், அம்மூன்று மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளியில் இருந்து மாணவர்கள் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in