

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் திரள வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில், திருச்சியில் இன்று நீட் எதிர்ப்பு மாநில மாநாடு நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன், துணைச் செயலாளர் ஜே.சூர்யா உட்பட மாணவர் சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:
''நீட் தேர்வு விலக்கு என்பது நாடு தழுவிய போராட்டமாக மாற வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளதாக டெல்லியில் கருதுகின்றனர். எனவே, நாடு முழுவதும் உள்ள இந்திய மாணவர் சங்கம், நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகளைத் திரட்டி, நீட் தேர்வில் உள்ள ஆபத்துகளை விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் திரள வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத் தருமாறு கூட்டணிக் கட்சியான பாஜகவிடம் வலியுறுத்தவில்லை. எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால், அப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதுடன், அதன் நகலை என்னிடம் அளித்து நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு உத்தரவிட்டார். நான் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது அவர் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதே நீட் தேர்வை திமுக எதிர்த்தது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்துடன் மத்திய அரசு உள்ள நிலையில், நீட் தேர்வில் விலக்குப் பெறுவதற்கு, ஜல்லிக்கட்டை மீட்டது போல் பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சாத்தியப்படும். பெரும்பான்மை அடக்குமுறையைக் கையாளும், அதிகாரத்தைக் காட்டும். ஆனால், அதையும் பணிய வைக்கக்கூடிய சக்தி மக்களுக்கு உண்டு என்பதை மாணவர்கள் மன்றம் நிரூபித்தாக வேண்டிய நிலை உள்ளது.
நீட் தேர்வைப்போல், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் திருத்தம் கொண்டுவந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அதிமுக வெளிநடப்பு செய்தது. நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதை அப்போது அனைவரும் தெரிந்து கொண்டனர்''.
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.