அரசு சின்னத்தைத் தவறாகப்‌ பயன்படுத்தி திமுக நிர்வாகிகள்‌ தேர்தல்‌ முறைகேடு: தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்

அரசு சின்னத்தைத் தவறாகப்‌ பயன்படுத்தி திமுக நிர்வாகிகள்‌ தேர்தல்‌ முறைகேடு: தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்
Updated on
1 min read

அரசுத் துறை, அரசு சின்னத்தைத் தவறாகப்‌ பயன்படுத்தி நாமக்கல்‌ மாவட்டத் திமுக நிர்வாகிகள்‌ தேர்தல்‌ முறைகேட்டில்‌ ஈடுபடுவதாக அதிமுக செய்தித்‌ தொடர்பாள‌ர் ‌பாபு முருகவேல்,‌ மாநிலத் தேர்தல் ஆணையருக்கு புகார்க் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

’’ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ நாமக்கல்‌ மாவட்டம்‌, மாவட்ட ஊராட்சிக்‌ குழு 6-வது வார்டில்‌ நடைபெற இருக்கின்ற இடைத்‌தேர்தலில்‌ வாக்காளர்களின்‌ வாக்கைக் கவர்வதற்காக உண்மைக்குப்‌ புறம்பான செய்திகளை வாக்காளர்களிடம்‌ சொல்லி அரசுத் துறைகளைத் தவறாகப்‌ பயன்படுத்தி, நலவாரியத்தில்‌ உறுப்பினர்களாகச் சேர்ந்தால்‌ 5,000 ரூபாய்‌ தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அரசு அலுவலர்களே நேரடியாக உங்கள்‌ இல்லங்களுக்கே வந்து உங்களை உறுப்பினர்களாக இணைத்து அதன்‌ பயனையும்‌, உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும்‌ என்று சொல்லி, தமிழக அரசு அறிவித்திருப்பதாக, அரசு சின்னத்தை திமுக தலைவர்களோடு அச்சிட்டு தவறான நோக்கத்தோடு ஒரு பொய்யான தகவலைச்‌ சொல்லி இருக்கின்றனர்.

திமுக மாவட்டச்‌ செயலாளரும்‌, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமாரின்‌ உத்தரவின்‌ பேரில்‌ இந்த நடவடிக்கையை நாங்கள்‌ மேற்கொள்கிறோம்‌ என்று திமுக நிர்வாகிகள்‌ பொதுமக்களிடத்தில்‌ சொல்லி வாக்குகளைப்‌ பெற முயல்வதும்‌, பொய்யான தகவல்களை மக்களிடத்தில்‌ பரப்புவதையும்‌ உடனடியாகத்‌ தடுத்து நிறுத்தித்‌ தேர்தலை நியாயமான முறையில்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று அதிமுக சார்பில்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

புகார்‌க் கடிதத்தோடு இரண்டு காணொலிப்‌ பதிவுகளை இணைத்துள்ளேன்‌. அதனடிப்படையில்‌, அந்தக்‌ காணொலியில்‌ உள்ள நபர்களை உடனடியாகக்‌ கண்டறிந்து தேர்தலில்‌ முறைகேடு நடப்பதைத் தடுத்து நிறுத்தி உடனடியாக இச்செயலில்‌ ஈடுபட்டவர்களின்‌ மீது நடவடிக்கை எடுத்தும்‌, அரசின்‌ பெயரைத் தவறாகப்‌ பயன்படுத்தி, சட்டம்‌ - ஒழுங்கைச் சீர்குலைக்கும்‌ விதமாகச் செயல்படும்‌ நபர்களின்‌ மீதும்‌ இரு குழுவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும்‌ நபர்களின்‌ மீதும்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌’’.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in