

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களைக் கடந்தும் போலீஸ் சிறப்பு ஊதியத்தைத் தேர்தல் துறை தரவில்லை என்று ஆளுநர், முதல்வரிடம் புகார் தரப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்களுக்கு ரூ.1.33 கோடி தந்த நிலையில், பிஆர்டிசி பேருந்துக் கட்டணமான ரூ.70.48 லட்சம் தராத சூழல் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றிய போலீஸாருக்கு சிறப்பு ஊதியம், தேர்தல் பணி பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிற்கு அரசுப் போக்குவரத்து நிறுவனமான பிஆர்டிசி மூலம் இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு வாடகை ஆகியவற்றைத் தேர்தல் துறை இதுவரை செலுத்தவில்லை என்று தகவல் வெளியானது.
இதையடுத்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் துறை பற்றி ஆளுநர், முதல்வரிடம் புகார் தந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
''ஆர்டிஐ மூலம் தேர்தல் துறையிடம் தகவல்கள் கேட்டதற்கு அவர்கள், தேர்தலுக்காகப் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு ஊதியத் தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதேபோல் அரசு போக்குவரத்துக் கழகமான பிஆர்டிசி பேருந்துகளுக்கான ரசீதுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் இருந்து வரவில்லை என்பதால் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில், தனியார் வாகனங்களின் வாடகையாக ரூ.1.33 கோடி வழங்கியுள்ளதாகத் தகவல் அளித்துள்ளனர்.
குறிப்பாக பிஆர்டிசி நிர்வாகத்திடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்தல் துறை எவ்வளவு வாடகை நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது எனக் கேட்டதற்கு, தேர்தல் துறை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.70.48 லட்சம் எனத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தேர்தல் துறையினரோ பிஆர்டிசி ரசீதுகள் இதுவரை வந்து சேரவில்லை என முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளனர். இது புதுச்சேரி அரசுத் துறைகள் எவ்வளவு பொறுப்பற்ற நிலையில் செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
தேர்தல் செலவினத்திற்காக அரசு ரூ.300 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தேர்தல் பணியாற்றியவர்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் காலதாமதம் செய்து வருவது ஏன்? தனியார் வாகனங்களுக்குச் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வாடகைத் தொகையை உடனடியாகச் செலுத்தியுள்ள தேர்தல் துறையினர், அரசு ஊழியர்கள், அரசு பொது நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை இதுநாள் வரை செலுத்தாமல் இருப்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகி, உள்ளாட்சித் துறைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், காவலர்களுக்கான சிறப்பு ஊதியம் வழங்காததும், பிஆர்டிசி நிறுவனத்திற்குப் பல லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமலும் உள்ளது ஏற்புடையதல்ல. எனவே, காவலர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊதியம் மற்றும் பிஆர்டிசி பேருந்துக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாகச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன்''.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.