

தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல வள்ளலாருக்கு மணிமண்டபம் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, கோயில் நகைகளை உருக்குவதில் சிறு தவறு கூட நிகழாது என்று ஐயப்பன் மீது சத்தியமிட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை தங்க சாலையில் அமைந்துள்ள வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (3.10.21) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''மனிதக் கடவுளாக வாழ்ந்த ராமலிங்க அடிகளாரின் 199-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு வருமாறு முதல்வர் உத்தரவிட்டார். அதன் பேரில் நானும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனும் வள்ளலார் வீட்டுக்கு வந்துள்ளோம். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இங்கு வருவது இதுதான் முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை என்ற வகையில் வள்ளலாரின் வீட்டில், தினந்தோறும் தன்னால் இயன்ற வகையில் அன்னதானத் திட்டத்தை வழங்கி வருவதாக வீட்டை நிர்வகித்து வரும் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். அவரால் முடிந்த அளவு வழிபாடுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
வடலூரில் 72 ஏக்கர் பரப்பில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். அந்த இடத்தை நானும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் அங்கு மணிமண்டபம் உருவாக்கப்படும்.
வள்ளலார் வாழ்ந்த வீட்டின் கட்டிடத்தின் ஸ்திரத் தன்மையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்தவுடன் இந்தக் கட்டிடத்தைப் பழமை மாறாமல் பாதுகாப்போம்.
கடவுளுக்கு வந்த காணிக்கை நகைகள் அனைத்தையும் வங்கியில் வைக்கிறோம் என்று சொல்லவில்லை. ஏற்கெனவே மன்னர்களும், ஜமீன்தார்களும், செல்வந்தர்களும் தெய்வங்களுக்கு அளித்த, திருக்கோயிலுக்குச் சொந்தமான நகைகளில் ஒரு குண்டுமணி அளவைக்கூட இதற்கு எடுக்கப்போவதில்லை.
கடந்த பத்தாண்டு காலத்தில் திருக்கோயிலுக்குக் காணிக்கையாக வந்த நகைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. அதில், எந்தவிதப் பயன்பாட்டிலும் இல்லாமல் உள்ள நகைகளைக் கணக்கிட உள்ளோம். அதில் தெய்வ வழிபாட்டுக்குப் பயன்படும் நகைகளைக் கணக்கிட்டு, தெய்வங்களுக்குப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். தெய்வ வழிபாட்டுக்குத் தேவைப்படாத நகைகள், உடைந்த நகைகள், சிறுசிறு நகைகள் ஆகியவற்றை மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்காலைக்குக் கொண்டுசென்று உருக்க உள்ளோம்.
அதன் மூலம் பெறப்படும் தங்கக் கட்டிகளை தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையை முழுமையாகத் திருக்கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம். இந்தத் திட்டம் வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்படும். இதற்காகக் கோயில்களை சென்னை, மதுரை, திருச்சி என 3 மண்டலங்களாகப் பிரித்து நீதிபதிகளை நியமித்துள்ளோம். இந்தத் திட்டத்தில் இம்மியளவு கூட தவறு நடைபெறாது.
திருப்பதியிலும் இதே நடைமுறை உள்ளது. ஏன் தமிழகத்தில் கூட 1977-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை உள்ளது. பத்தாண்டு காலமாகத்தான் நகைகளை உருக்கும் பணி நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி அறங்காவலராக இருந்த சோமநாதர் கோயிலில் கூட இதே நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இறைவனுக்குத் தந்த பொருட்களை இறைவனுக்கே பயன்படுத்தும் வகையில் திட்டம் தொடங்கப்படும். ஐயப்பன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறோம். இந்தப் பணியில் ஒரு சிறு தவறு கூட நிகழாது. அந்த நகைகளைப் பயன்படாமல் வைத்திருந்தால் யாருக்கு என்ன லாபம்? மதத்தை, இனத்தை வைத்து அரசியல் பேசக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்''.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.