

தமிழகத்தில் 4-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. 20 ஆயிரம் இடங்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும் 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும் 26-ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், 4-வது கட்டமெகா முகாம் இன்று தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடப்படப்படுகிறது.
காலை 7 மணி தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 25 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.