

பதிவுத்துறையில் பொதுமக்கள் குறைதீர்ப்பதற்கான முகாம்களை திங்கள்கிழமை தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் கடந்த செப்.6-ம் தேதி பதிவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர், ‘‘பதிவுத்துறையில் பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற திங்கள்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும்’’ என அறிவித்தார்.
இதையடுத்து, பதிவுத்துறை தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், கடந்தஜூன் 16-ம் தேதி பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், பதிவுத்துறை தொடர்பான புகார்களை பெறுவதற்கான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.
அதில், தினசரி 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவுத்துறைதலைவர் அலுவலகத்தில் தினசரி500-க்கும் அதிகமான புகார் மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர், துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், வாரம்தோறும் ஒரு நாள் பதிவுகுறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றுபதிவுத்துறை தலைவர் தனது கடிதத்தில் அரசுக்கு தெரிவித்துள்ளார்.
இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, 9 பதிவு மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்களில் உரியஅலுவலகங்களில் வாரம்தோறும்திங்கள் கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் நடத்த பதிவுத்துறை தலைவருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த முகாம்களை பொருத்தவரை, திங்கள் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்பட வேண்டும். மக்கள்குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்பான பதிவேடுகள், பதிவுக்குறிப்புகள் தெளிவாக பராமரிக்க வேண்டும். விசாரிக்க வேண்டிய புகார் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தீர்வு காண வேண்டிய மனுக்கள் மீது 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவணப்பதிவு தொடர்பான புகாராக இருந்தால் சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேடுகள், பதிவுப்புகார்கள் அதிகம் வரும் அலுவலகங்களை துணை பதிவுத்துறை தலைவர் ஆய்வு செய்ய வேண்டும்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மாதம்தோறும் துணை பதிவுத்துறைத் தலைவர் குறைதீர் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.