சுவாதி கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்: மருத்துவரின் அறிக்கையால் பரபரப்பு

சுவாதி கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்: மருத்துவரின் அறிக்கையால் பரபரப்பு
Updated on
2 min read

மின்சாரத்தால் ராம்குமார் இறக்கவில்லை என்று மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால், சிறையில் ராம்குமார் இறந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி 2016 ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

மருத்துவர்கள் அறிக்கை

இந்த வழக்கு குறித்த விசாரணையை மாநில மனித உரிமை ஆணையமும் நடத்தி வருகிறது. ராம்குமார் மரணம் தொடர்பாக மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்களின் அறிக்கைகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆகஸ்ட் 18-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

சாத்தியக்கூறுகள் இல்லை

மேலும் இந்த அறிக்கையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் 2016 அக்.7-ம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அவரது மூளை, இதய திசுக்கள், நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கினால் உடலில் இருக்கும் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள், பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

2016 செப்.18-ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த உடலுடன் சிறைத்துறை மருத்துவரும் வந்திருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி டாக்டர் சையது அப்துல் காதர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து எந்த நகலையும் சிறை மருத்துவர் அளிக்கவில்லை. மேலும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

நான் வழங்கிய பதிவேட்டிலும் மின்சாரம் தாக்கியதால் ராம்குமார் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை. அதே வேளையில் அவரது உடலில் விறைப்புத் தன்மை இருந்தது. பொதுவாக ஒருவர் இறந்து 12 மணி நேரம் கழித்துதான் விறைப்புத் தன்மை ஏற்படும். அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in