Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

தோல்வியிலும் துவளாத முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற உதகை வியாபாரியின் மகள்

ஐஏஎஸ் தேர்வில் முதல்முறை முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது முயற்சியில் உதகை வியாபாரியின் மகள் தேர்ச்சி பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த வியாபாரி தியாகராஜன். இவரது மனைவி லட்சுமி, அஞ்சலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களது மூத்த மகள் சுவாதிஸ்ரீ (24). பிஎஸ்சி வேளாண்மை பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து, இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக படித்து வந்தார்.

தற்போது இவர், குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. இதில் சுவாதிஸ்ரீ, தமிழக அளவில்3-வது இடத்தையும், இந்திய அளவில் 126-வது இடத்தையும்பிடித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘நான் ஐஏஎஸ் தேர்வுக்காக கடந்த 2 ஆண்டுகளாக கடின முயற்சியுடன் படித்து வந்தேன். முதலில் எழுதிய தேர்வில் தோல்வி அடைந்தேன். பெற்றோர் அளித்த நம்பிக்கையால், 2-வது முறை முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர், வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் தேர்வு எழுதுவதற்கு முன்பு நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவை சந்தித்தபோது, அவர் வழங்கிய அறிவுரைகள் எனக்கு ஊக்கமளித்தன. நான் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சிறப்பாக பணிபுரிவேன்’’ என்றார்.

கடந்தாண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கக்குளாவை சேர்ந்த மல்லிகா ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர், இந்திய அளவில் 621-வது இடம் பிடித்தார். இந்தாண்டு உதகையை சேர்ந்த பெண், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x