வன உயிரின வார விழா: எலியட்ஸ் கடற்கரையில் மாரத்தான் ஓட்டம்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார் வனத் துறை தலைவர் அசோக் உப்ரேதி. படம்: பு.க.பிரவீன்
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார் வனத் துறை தலைவர் அசோக் உப்ரேதி. படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தமிழ்நாடு வனத் துறை சார்பில் வரும் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, வனத் துறை சார்பில் ஏற்கெனவே ஓவியம், பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. விழாவின் தொடக்க நாளான நேற்று, வன உயிரினங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

வனத் துறை தலைவர் அசோக் உப்ரேதி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, "மாநில வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, வனப் பகுதிகளில் அதிக அளவில்மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கவும், வனப் பாதுகாப்பு மற்றும்மனித-வன உயிரின மோதல்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வன விலங்குகளால் விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க, வனப் பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள், யானைகள் காப்பகப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோடைகாலத்தில் விலங்குகளுக்கு ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டி அமைக்கவும், காட்டுத் தீயை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வனப் பரப்பை அதிகரித்தல் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்கும் பணியில், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் ஆகாஷ் பர்வா, நாகநாதன், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கருணப்பிரியா, சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, மாவட்ட வனப் பாதுகாவலர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in