Published : 23 Mar 2016 12:46 PM
Last Updated : 23 Mar 2016 12:46 PM

மாற்று அரசியலை வளர்க்கும் தகுதியை ம.ந.கூ இழந்துவிட்டது: தமிழருவி மணியன் விமர்சனம்

விஜயகாந்துடன் கைகோத்ததன் மூலம் மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் தகுதியை மக்கள் நலக் கூட்டணி இழந்துவிட்டது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

திமுக எப்படியாவது விஜயகாந்த்தை தன் பக்கம் வரவழைத்து அவர் வைத்திருக்க கூடிய 5 விழுக்காடு வாக்குகளை தன்னோடு சேர்த்து ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றி விடலாம் என்று கனவில் இருந்தார்கள். அந்த கனவு கலைந்திருக்கிறது.

அந்த கனவு கலைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார் என்றால், இனி மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியலை வளர்ந்தெடுக்கும் கூட்டணி என்று வாய் திறந்து பேசல் ஆகாது.

எந்த வகையில் திமுக, அதிமுக இருவரிடம் இருந்தும் ஒரு மாற்று அரசியலை தேமுதிகவிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

அதிமுகவில் துதி பாடும் அரசியல் மற்றும் திமுகவில் குடும்ப அரசியல் இரண்டுமே தேமுதிகவில் உண்டு. தமிழகத்தில் அமாவாசை இருள் சூழப் போகிறது என்பதற்கான அறிகுறி தான் இன்றைக்கு உருவாகி இருக்கக் கூடிய இந்தக் கூட்டணி.

இன்றைக்கு விஜயகாந்த்தை ஏற்று அவருடைய முதுகிற்கு பின்னால் வைகோ இருக்கின்றார் என்றால் அவருடைய அரசியலில் வீழ்ச்சியையும், சரிவையும் சந்திப்பதற்கு அவராகவே தகுதிப்படுத்திக் கொண்டார். வைகோவின் வீழ்ச்சி என் கண் முன்னால் தெரிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x