

நாடு முழுவதும் அரிசி, பருப்பு, கோதுமை, பால், எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எந்தப் பொருளின் விலையாவது அசாதாரணமாக உயர்வது தெரிந்தாலோ அல்லது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டும் விலை உயர்வு அதிகமாக இருந்தாலோ அதற்கான காரணத்தை கண்டறியும். குறிப்பிட்ட மாநில அரசிடம் காரணங்களை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கும்படி கூறும்.
விலைவாசியைக் கண்காணிக்க ஏதுவாக, அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நிலவும் சுமார் 50 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்த விவரங்களை வாரந்தோறும் மத்திய அரசுக்கு அனுப்பி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வெங்காயம், தக்காளி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிந்தது.
இதை கவனித்த மத்திய அரசு, விலை உயர்வுக்கு பதுக்கல் நடவடிக்கையே காரணம் என்பதை கண்டுபிடித்தது. பதுக்கல்காரர்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு அனுப்பியது. மேலும், இந்த ஆண்டு தென்மாநிலங்களில் பருவமழை பொய்க்க வாய்ப்பு இருப்பதையும் அந்த உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக அரிசி, பீன்ஸ், வெங்காயம், பால் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது. மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து, விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் உயரதிகாரிகள் ‘தி இந்து’விடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:
தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல், அரிசி பதுக்கல் பெரிய அளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைப்போல் தமிழகத்தில் விலைவாசி அதிரடியாக அதிகரிக்கவில்லை. புளி, மிளகாய் விலை உயர்ந்த போது, அவற்றை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்றோம். அதன்பிறகு, அதன் விலை கட்டுக்குள் வந்தது.
அரிசி விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று கூடியுள்ளது. தேங்காய் எண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.100 வரை கூடியுள்ளது. எனினும், காய்கறி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதுக்கலைத் தடுக்க தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பருவமழை குறித்த எச்சரிக்கையைப் பொறுத்தவரை வேளாண் துறை, வருவாய் மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.