

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதிய மக்களிடத்தில் சொல்லி திமுக வெற்றிபெற்றதாக கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் கிராமத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைத்து, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அளித்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றியவர். அவரது மறைவிற்கு பிறகு 4 ஆண்டு காலம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பான ஆட்சி நடத்தினார்.
இதனால் அதிமுக தொண்டன் என்றால் மக்களிடையே ஒரு மரியாதை இருந்தது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின்தடை இல்லா மாநிலமாக தமிழகம் திகழந்தது.
ஆனால் தற்போது மின்வெட்டு ஏற்படும் நிலை உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவேன் எனக்கூறி பொய் வாக்குறுதி அளித்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. இது போல பல்வேறு பொய் வாக்குறுதிகளை திமுக அரசு அளித்துள்ளது என்றார்.
கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் ரா.குமரகுரு தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.