

10 ஆண்டுகளாக அதிமுகவினர் செய்யாததை, 100 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீத்தாம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் டி.பெரியசாமி தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி., சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதில், தீத்தாம்பட்டி ஊராட்சியில் பூங்கா அமைக்க வேண்டும். கபடி வீரர்கள் அதிகம் உள்ளதால், கபடி விளையாட மைதானம் அமைத்து தர வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 7 முறை இயக்கப்பட்ட அரசு நகரப்பேருந்து தற்போது 2 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன.
அதனை 7 முறை இயக்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் வனத்துறை பகுதிக்கு உள்ளே நுழைந்துவிடுவதால், பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால் வனத்துறை இடத்தை அளந்து வேலி அமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். குருமலையை சுற்றுலாத்தலமாக்க வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். கிராமச்சாலைகளை மேம்படுத்த வேண்டும். தீத்தாம்பட்டி கிராமத்தில் 350 ரேஷன் கார்டுகள் உள்ளன.
இதில் வெறும் 42 கார்டுகள் மட்டும் தான் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளன. ஆனால், ஏராளமான மக்கள் வறுமையில் உள்ளனர். எனவே, சுமார் 250 பேர் வறுமைக்கோட்டின் பட்டியலில் இணைக்க வேண்டும். மருத்துவ வசதி செய்து தர வேண்டும். பொதுச்சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசுகையில், பேருந்துகள் வசதி செய்து தர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வந்த மனுக்களில், தூத்துக்குடி தான் மனுக்கள் மீது அதிக நடவடிக்கை எடுத்த மாவட்டமாக உள்ளது.
இந்த ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்போம். குழந்தை திருமணம் என்பது அந்த குழந்தையின் எதிர்காலத்தையே வீணாக்கக்கூடிய ஒன்று. அந்த குழந்தை படிப்பதற்கு வாய்பே இருக்காது. அதனால் யாரும் அதனை செய்யக்கூடாது. அப்படி குழந்தை திருமணம் நடந்தால், 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 181 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும். உங்களது பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பாக எங்களை அணுகலாம். அதனை சரி செய்து தருவதற்காக தான் நாங்கள் இருக்கிறோம், என்றார் அவர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 10 ஆண்டுகளாக அதிமுகவினர் செய்யாததை, திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். இதுதான் அதிமுகவின் விமர்சனங்களுக்கான பதில். திமுகவின் அடித்தளம் சரியில்லை என்று பாஜக கூறுவது நல்ல நகைச்சுவையாகும், என்றார்.
முன்னதாக கோவில்பட்டி நகராட்சி பொதுநிதி ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி நுழைவாயிலை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், நகர திமுக செயலாளர் கருணாநதி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் தலைமையில் சிவந்திபட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.