

அரை நூற்றாண்டு காலமாக உழைத்துதான் முதலமைச்சர் கனவை ஸ்டாலின் நனவாக்கினார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சுமைதாங்கியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்.2) பிரச்சாரத்தில் பேசும்போது, ‘‘தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவோம். ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சித் தேர்தல் சட்டப்பேரவையை விட வலிமையானது. ஆகவே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் நல்லவர்களையும் வலிமையானவர்களையும் தேர்வு செய்யுங்கள்.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் கொடுத்தார்கள். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.
அதனால்தான் நாம் தற்போது தனித்துப் போட்டியிடுகிறோம். அரை நூற்றாண்டு காலம் உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார். அதைப்போல், பாமகவும் தனது கனவை நனவாக்கப் பாடுபடுகிறது.
மாநில சுயாட்சி கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். அது நியாயமானதுதான். அதனால்தான் பாமக அந்தக் கோரிக்கையை வரவேற்கிறது. மாநிலப் பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று நீட் தேர்வு பிரச்சினை வந்திருக்காது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவளிக்கின்றன’’ என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
வேலூர் மாவட்டம்:
வேலூர் அடுத்துள்ள பொய்கை சந்தைப் பகுதியில் கொட்டும் மழையில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் என நினைக்க வேண்டாம். நான் எம்.பி.யாக இருக்கிறேன். எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரூ.5 கோடி தொகுதி நிதி இருக்கும். அதையும் பிடுங்கி விட்டார்கள். எம்எல்ஏக்களுக்கும் அதிகாரம் கிடையாது. சட்டப்பேரவையில் பேசலாம் அவ்வளவுதான். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவருக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது.கிராம சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதை எந்த அதிகாரியாக இருந்தாலும் செய்து முடிக்க வேண்டும். ஸ்டாலின் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து முதலமைச்சரானார். அவரது ஆசை நிறைவேறிவிட்டது. அதற்கு அடுத்தது நாம்தான். தீபாவளி முடிந்ததும் ஊர், ஊராக வரப்போகிறேன். பெரிய கூட்டம் போட்டு கல்வி, சுகாதாரம், விவசாயம் எப்படி இருக்க வேண்டும் என்றும் மது ஒழிப்பு எப்படிக் கொண்டு வருவோம் என்று சொல்லப் போகிறேன்’’ என்றார்.