

தமிழகத்தில் புதிய பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரம்யா தேவி தலைமையில், இன்று (அக். 02) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:
"உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் மூலம் வரப்பெற்ற 5 லட்சம் மனுக்களில் 3.5 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோன்று, கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் கோரிக்கைகளை 3 மாதங்களில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிகழாண்டு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன. மேலும், நகர்ப்புறங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதிய பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும், 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உள்ளது. 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு வந்தாலும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில்லை என மக்கள் மனதளவில் மாற வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.