Published : 02 Oct 2021 03:54 PM
Last Updated : 02 Oct 2021 03:54 PM

துரைமுருகனை படிக்க வைத்த எம்ஜிஆர் நம்பிக்கை துரோகியா?- ஓபிஎஸ் கேள்வி

அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

வேலூர்

துரைமுருகன் படிக்க உதவி செய்த எம்ஜிஆர் நம்பிக்கை துரோகியா என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று (அக். 02) நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:

"கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீதத்தில் வெற்றியை இழந்தோம். அந்த ஆதங்க உணர்வு தொண்டர்களின் எண்ணத்தில் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கி இன்று 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆருக்கு கருணாநிதியால் பல்வேறு சோதனைகள், பிரச்சினைகள் வந்தது. அவற்றையெல்லாம் முறியடித்து 3 முறை யாராலும் வெல்ல முடியாத முதல்வராக எம்ஜிஆர் வந்தார்.

16 லட்சம் தொண்டர்களுடன் எம்ஜிஆர் விட்டுச் சென்ற இயக்கத்தை ஜெயலலிதா 1.50 கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக மாற்றினார்.

10 ஆண்டுகள் எம்ஜிஆர், 16 ஆண்டுகள் ஜெயலலிதா, 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி என, மொத்தம் 30 ஆண்டுகள் அதிமுக சிறப்பான ஆட்சியை நடத்தியது. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை திமுக அறிவித்தது. ஆனால், அவற்றை காற்றில் பறக்கவிட்டு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பொய் பேசினார்கள். முடியாது எனத் தெரிந்தும் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைப்பதில் திமுகவினர் பெரிய கில்லாடிகள்.

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் சாதி, மத கலவரங்கள் இல்லை. தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது. அதிமுக தொண்டன் என சொன்னால் தமிழக மக்களிடம் பெரும் மரியாதை உள்ளது. இது எந்த கட்சிக்கும் கிடையாது. திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. ஆட்சி, காட்சிப் பொருளாக மாறியுள்ளது.

துரைமுருகன் எம்ஜிஆரை பற்றி நா கூசாமல் அவதூறாகப் பேசியுள்ளார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணா எம்ஜிஆரை என் இதயக்கனி என சொன்னாரே, அவர் நம்பிக்கை துரோகியா?

1967-ல் மகத்தான வெற்றிபெற்று அண்ணா முதல்வரானதும் இந்த வெற்றிக்குக் காரணம் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று ராமச்சந்திரனுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார். அவர், நம்பிக்கை துரோகியா? ஏன், துரைமுருகனை படிக்க உதவி செய்தாரே, அவர் நம்பிக்கை துரோகியா?

தனது திரைப்படங்கள் மூலம் திமுக கொள்கைகளை பரப்பி திமுக ஆட்சிக்கு வர காரணமானவர் எம்ஜிஆர். அவர் நம்பிக்கை துரோகியா? அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக வரக் காரணம் எம்ஜிஆர். அவர் நம்பிக்கை துரோகியா? மேடையில் எல்லோரும் சிரிக்க வேண்டும் என்பதற்காக நா கூசாமல் பேசக்கூடாது.

இப்போது நாம் பெறும் வெற்றி அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். நாம் பெறப்போகும் வெற்றியின் மூலம் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்".

இவ்வாறு அவர் பேசினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக்கூடிய 9 மாவட்டங்களில் ராணிப்பேட்டை மாவட்டம் 100 சதவீதம் வெற்றி பெறும்.

இங்கு தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும் வெற்றியை பெற்றுத் தந்தவர் அவர். இங்கு வெற்றி விழா கூட்டம் நடைபெறும்" எனப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x