Published : 02 Oct 2021 03:08 PM
Last Updated : 02 Oct 2021 03:08 PM

ஆட்கொல்லிப் புலியின் இருப்பிடம் தெரியவில்லை: தேடுதல் பணியில் வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர்

சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஆட்கொல்லிப் புலியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் பணியில் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன்(51) என்பவரை, செப். 24-ம் தேதி தாக்கிக் கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த புலி நேற்று (அக். 01) காலை மசினகுடி பகுதிக்குச் சென்றது.

வனத்துறையினர், மசினகுடி மன்றாடியார் வனப்பகுதியில் தேடினர். மசினகுடி, கல்குவாரி அருகே, மாடு மேய்த்துக் கொண்டிருந்த குறும்பர் பாடியை சேர்ந்த பசுவன் (65) என்பரை தாக்கிக் கொன்றது. ஆத்திரம் அடைந்த மக்கள், இறந்தவர் உடலை எடுக்க விடாமல் தடுத்ததுடன், புலியை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி, மசினகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, புலியை சுட்டுக் கொல்ல தலைமை, முதன்மை வன உயிரின காப்பாளர் சேகர்குமார்நீரஜ் உத்தரவு வழங்கினர். இது குறித்தத் தகவலை வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். தொடர்ந்து, மசினகுடி பகுதியில் புலியை தேடும் பணியை இன்று (அக். 02) காலை தொடங்கினர்.

புலியை தேடும் வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர்.

முதலில், புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி செய்யப்படும். அது முடியாதபட்சத்தில், சுட்டுக்கொல்லப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா மாநிலம் வயநாடு வனக்காப்பாளர் நரேந்திர தாஸ் தலைமையிலான சிறப்பு அதிவிரைவுக்குழுவினர் தலைமையில், அதிரடிப்படையினர், வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்கொல்லியை சுட்டுக்கொல்லும் பணியில் அதிரடிப்படை டிஎஸ்பி மோகன் நிவாஸ் தலைமையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

புலியை எவ்வாறு அடையாளம் காணலாம்?

வனத்துறையினர், புலியின் உடலில் உள்ள வரிகளை வைத்து அடையாளம் காண்பார்கள். ஒரு புலியின் உடலில் உள்ள வரிகள், வேறு புலியின் உடலில் அதேபோன்று இருக்காது. அதன் அடையாளம் மாறும். இதன்படி, ஆட்கொல்லி புலி அடையாளம் காணப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வரும் புலி.

புலி, மசினகுடியில் தற்போது பதுங்கியுள்ள இடம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகில் உள்ளது. இதனால், அதிரடிப்படையினர் தவறுதலாக வேறு புலியை சுட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பின்போது, ஆட்கொல்லிப் புலியின் அடையாளத்தைக் காண்பித்த வனத்துறையினர், முதலில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி, அதனைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். முடியாதபட்சத்தில் புலியை சுட்டுப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சாலைகள் மூடல்

ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளதால், கல்லட்டி மலைப்பாதை மற்றும் மசினகுடி - கூடலூர் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் இந்த சாலைகளில் நடமாட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், ஆட்கொல்லிப் புலியின் இருப்பிடத்தை வனத்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x