Published : 02 Oct 2021 11:18 AM
Last Updated : 02 Oct 2021 11:18 AM

குன்னத்தூர் அருகே குடியிருப்புக்குள் புகும் மழைநீர்: தீர்வுகோரி ஆட்சியரிடம் மக்கள் வலியுறுத்தல்

ஆதிதிராவிடர் காலனியில் புகுந்த மழைநீர்.

திருப்பூர்

குன்னத்தூர் அடுத்த கருமஞ்செறை பகுதியில், மழைக்காலங்களில் குளம் நிரம்பி குடியிருப்புக்குள் மழைநீர் புகுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அடுத்த கருமஞ்செறை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதியானது குளத்தை ஒட்டி உள்ளது. மழைக்காலங்களில் குளம் நிறையும்போது, குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்சினை உள்ளது. பலமுறை பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இவர்களது பிரச்சினை தீரவில்லை.

ஆதிதிராவிடர் காலனியில் புகுந்த மழைநீர்.

இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த அம்சவேணி கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் வாழ்ந்து வருகிறோம். அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 1994-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

இங்கு வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். நேற்று முன்தினம் இரவு (செப். 30) பெய்த கனமழையின் காரணமாக, குடியிருப்பை ஒட்டி உள்ள குளம் நிறைந்து, மழைத்தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானோம்.

தாழ்வான பகுதி என்பதால், மழைக்காலங்களில் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், துணி, பணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் நீரில் மூழ்கியது.

ஆதிதிராவிடர் காலனியில் புகுந்த மழைநீர்.

மழை பெய்யும்போது, ஒவ்வொரு முறை குளம் நிரம்பும் போதும், இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறோம். குடியிருப்புகள் அனைத்தும் ஓலையால் வேயப்பட்ட குடிசை என்பதால், மழைக்காலங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறோம்.

எனவே, மழைநீர் வீடுகளுக்குள் வராமல் இருக்கும் வகையில், குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைத்துத் தர வேண்டும்" என்றார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மழைநீர் அதிகளவில் உள்ளே புகுந்ததால், வீடுகளுக்குள் தண்ணீர் இரண்டடி உயரத்துக்கு வந்ததால், பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகங்களும் வீணாகின. அதேபோல், சில வீடுகளின் தரைப்பகுதி கடுமையாக சேதம் அடைந்தன.

அதேபோல், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த துணிகளும் ஈரமடைந்தன. இரவு நேரத்தில் யாரும் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள், பெண்கள் என, ஏராளமானோர் திரண்டு, ஆட்சியர் சு.வினீத்தை சந்தித்து நேற்று (அக். 01) மனு அளித்தனர்.

ஊத்துக்குளி வட்டாட்சியர் ராஜேஸ்குமார் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறுகையில், "கருமஞ்செறை பகுதி பள்ளமான பகுதி என்பதால், தண்ணீர் வந்தது. அதனை தற்போது சரிசெய்து, சுத்தப்படுத்திவிட்டோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x